Friday, December 17, 2010

ஆசியர்கள் Vs அரபிமொழி



நம்ம லாலு பிரசாத் யாதவின் ஒரு சாதனையை யாராலும் மறக்க முடியாது. பலபத்தாண்டுகளாக நஷ்டத்தையே காதலித்துக்கொண்டிருந்த நமது ரயில்வேயை லாபத்திற்கு மணமுடித்த சூத்திரதாரி.
பத்தாண்டுகளுக்கு மேல் கோலோச்சிய அவரது சொந்த மாநிலத்தில் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார். யாரால்?
அதே ரயில்வேயை நிர்வகித்த அனுபவமும் கொண்ட நிதீஷ் குமாரால்.
ரயில்வேயில் நிதிஷ் குமார் கண்டெடுத்ததும் நஷ்டம்தான். ஆனாலும் பீஹார் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் 5 வருடங்கள் அவரது சாம்பிள் ஆட்சியைப் பார்த்த பிறகும்.
லாலு நிதீஷ் விஷயத்தில் இரு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
  1. ரயில்வேயும் மாநில அரசியலும் லாலுவால் தொழில்களாகத்தான் பார்க்கப்பட்டன‌.
    ரயில்வேத் தொழிலில் லாபமடைந்ததை மக்கள் விரும்பினர்.
    மாநில அரசியல் தொழிலில் (அவர்)லாபமடைந்ததை மக்கள் விரும்பவில்லை
  2. நிதிஷ் இரண்டையும் அரசாட்சி ரீதியிலேயே அணுகினார்
    ரயில்வேயில் மற்றவர்களைப்போலவே நஷ்டத்தைக் காட்டினார்
    ஆனால் மாநில அரசியலைத் தொழிலாக்காமல் அரசாட்சி நடத்தியதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். 
என்ன ஒரு வித்தியாசம், நிதீஷை ஹார்வர்டு மற்றும் வார்ட்டன் (Harvard & Wharton)பல்கலைக்கழகங்கள் அவர்களது மாணாக்கர்களுக்கு பாடம் நடத்த அழைக்கப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பதே பணம்பண்ணும் நிர்வாகம் மட்டும்தான்.
புரிகிறது; இந்த விஷயத்துக்கும் மேலே உள்ள படத்துக்கும் என்ன சம்மந்தம் என்பதுதானே கேள்வி?
சொல்கிறேன், சொல்கிறேன். சற்றுப் பொறுங்களய்யா..
துபாய் தொலைதொடர்பு நிறுவனமான ‘எட்டிசலாட்’ பல்வேறு யுக்திகளைக் கையாண்டு சட்டவிரோத(!?)இணையத் தொலைபேசி உபயோகிக்கும் பாவப்பட்ட எக்ஸ்பேட்ரியாட்களை தன்வசம் மீண்டும் இழுத்துவரப் “படாதபாடு” படுகிறது. அதில் பல யுக்திகள் நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, பின் இரண்டு பேருமே எடுத்து ஊதி ஊதி தின்னலாம் என்ற கதையாகத்தான் உள்ளன.
வெள்ளிக்கிழ‌மை ப‌ஜாருக்கு வ‌ரும் அடிமட்டத் தொழிலாளிக‌ள் கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் அதைப்பிடுங்கி,பரிசோதித்து, அதில் தொலைபேசும் மென்பொருள் இருந்தால் சில‌நூறு திர்ஹ‌ம்க‌ள் அப‌ராத‌ம் விதிப்ப‌தும் அதில் ஒரு உத்தி.
 ஆனால் மேலே உள்ள விளம்பரம் அப்படியல்ல. தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சிறந்தது. அந்த விளம்பரம் சொல்வது இதுதான்: இந்த திட்டத்தில் சேர்ந்துகொண்டால் மாலை 5 மணியில் இருந்து காலை 9 மணிவரை நிமிடத்துக்கு 99 ஃபில்ஸ்தான். இத்திட்டம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு மட்டும்தான். 99 ஃபில்ஸ் குறைவான கட்டணம்தானா என்பதை விடுங்கள்.
மேற்சொன்ன 4  நாட்டைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு அர‌பியில் எத‌ற்கு விள‌ம்ப‌ர‌ம் என்று அதிக‌ப்பிர‌சிங்க‌த்த‌ன‌மாக‌க் கேட்ப‌வ‌ர்க‌ளை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். இப்ப‌டிப் போட்டு இந்த‌ ஆசிய‌ர்களுக்கு ஆர்வமூட்டி அது என்ன‌ என்று அர‌பி தெரிந்த‌வ‌ர்க‌ளைக் கேட்க‌த்தூண்டும் விள‌ம்ப‌ர‌ உத்தி என்ப‌தைக்கூட‌ அறியாத‌ பாம‌ர‌ர்க‌ள் நீங்க‌ள்!
லாலு போன்ற‌ திற‌மையான‌வ‌ர்க‌ளை ஹார்வ‌ர்டு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் தேடிக்கொண்டேயிருக்கிற‌தாம். யாருக்காவ‌து அங்கு தொட‌ர்பு இருந்தால், எட்டிச‌லாட் மார்க்கெட்டிங் மானேஜ‌ரை சிபாரிசு செய்யுங்க‌ள் என்று நான் சிபாரிசு செய்கிறேன்!